Publish Date: Tue, 01 Apr 2008 (16:09 IST)
Updated Date: Tue, 01 Apr 2008 (16:07 IST)
''கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது'' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இஃபா மேலாண்மை ஆலோசனை மையம், தாய்மடி தமிழ்ச் சங்கம் இணைந்து சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடத்திய "சென்னை வேலைவாய்ப்பு முகாம் 2008'ஐ தொடங்கிவைத்து ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 12 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது. பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதத்தில் வணிக ரீதியான துறைகளில் முதல் முறையாக சமூக நோக்கோடு இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கலைப் பட்டம் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல முன் அனுபவம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ததில் 20 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.