''தமிழக அரசு பிறப்பித்துள்ள சொத்து வரி உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்களுக்கான வரியை 1.4.2008 முதல் பன்மடங்கு உயர்த்துவதற்கான ஆணையை தி.மு.க. அரசு பிறப்பித்திருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டிய சொத்து வரி 1.10.2006 முதல் மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மக்கள் மீது சுமையை திணிக்க கூடாது என்ற அடிப்படையில் எனது ஆட்சிக்காலத்தில் அதாவது 1.10.2003 முதல் சொத்து வரி ஏதும் மாற்றப்படவில்லை.
ஆனால் இப்போது சொத்து வரி 1.4.2008 முதல் அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று திமுக அரசு ஆணையிட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி மக்கள் மீது மேலும் நிதிச் சுமையை சுமத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. சொத்து வரி உயர்த்துவதற்காக வெளியிடப்பட்ட அரசு ஆணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.