காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏப்ரல் 5ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தமிழகம் வருகிறார் என்று மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணாசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏப்ரல் 5ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள், மகளிர் பேரணியையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
அவரது வருகை, பேரணி, பொதுக் கூட்ட நேரங்கள் பின்னர் பத்திரிகைகளின் மூலம் அறிவிக்கப்பட்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தோழர்கள் விரைந்து செயல்பட்டு அவரவர் பகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் விவசாயத் தோழர்கள், மகளிர், அனைத்து பிரிவு காங்கிரஸ் தோழர்களை பெரும் திரளாக பங்கேற்க அழைத்து வர வேண்டுகிறேன்.
ஆலோசனை கூட்டம்
அது தொடர்பான ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் மார்ச் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.