''எந்த பகுதியிலும், சாதாரண கட்டணப் பேருந்துகள் குறைக்கப்படவில்லை'' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அப்பாவு (தி.மு.க), சுந்தரம் (காங்கிரஸ்), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகிய உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கையில், 20 மண்டலங்களாக இருந்த போக்குவரத்துக் கழகங்கள், செலவுகளை குறைப்பதற்காக இவை 7 மண்டலங்களாக குறைக்கப்பட்டன.
முன்பு மாநிலம் முழுவதும் 17,500 பேருந்துகள் இருந்தன. தற்போது 19,500 பேருந்துகள் உள்ளன. எனவே, 2,000 பேருந்துகளுக்கு ஒரு மண்டலம் உருவாக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மண்டலத்தில் 3,900 பேருந்துகள் ஓடுவதால் அதனை 2ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்னை மண்டலத்திலும் 3,100 பேருந்துகள் இருப்பதால் இதனை தென்சென்னை, வடசென்னை என இரண்டு மண்டலங்களாக பிரிக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அனுமதி பெற்று மத்திய கம்பெனிகள் சட்டத்தின் அனுமதியையும் பெற்று இந்த போக்குவரத்து மண்டலங்கள் பிரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 900 அதிவிரைவு பேருந்துகள் ஓடுகின்றன. கடந்த ஆண்டு 100 குளிர்சாதன பேருந்துகள் வாங்கப்பட்டு அவற்றுக்கு கூடுகள் கட்டி முடிக்கப்பட்டு படிப்படியாக வந்து கொண்டிருக்கின்றன.
எந்த பகுதியிலும், சாதாரண கட்டணப் பேருந்துகள் குறைக்கப்படவில்லை. தாழ்தள பேருந்து, தொடர் பேருந்து உள்ளிட்ட புதிய பேருந்துகள் விடப்படுகின்றன. சாதாரண கட்டண பேருந்துகள் அதிகமாக பழுதடைவதால் ஒரு சில இடங்களில் அவை நிறுத்தப் பட்டிருக்கலாம் என்று அமைச்சர் நேரு பதில் அளித்தார்.