''தமிழகத்தில் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும்'' என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ஏற்றுமதி அலுவலகம், கம்ப்யூட்டர் வடிவமைப்பு மையத்தை மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது நாடு முழுவதும் மேலும் 30 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். எந்தெந்த இடத்தில் ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பது என்று முடிவு செய்யவில்லை. ஒவ்வொரு ஜவுளிப் பூங்காவும் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்படும்.
கைத்தறி, விசைத்தறி தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய வசதியாக நாடு முழுவதும் 6 ஒருங்கிணைப்பு மையங்கள் தலா ரூ.70 கோடியில் அமைக்கப்பட உள்ளன. ஈரோட்டில் விசைத்தறி தயாரிப்புகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுகிறது.
நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்ய இந்த மையங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும். உற்பத்தி பிரிவும் ஒருங்கிணைப்பு மையங்களில் செயல்படும் என்று அமைச்சர் இளங்கோவன் கூறினார்.