தமிழகத்தில் பெய்து வரும் கடுமையான மழையால் பல மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
அரபிக் கடலில் கன்னியாகுமரிக்கும் மாலத்தீவுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் உள்ள எல்லா ஏரி, குளங்களில் நீர் நிரமபி வழிகின்றது.
இதனால் தென் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இத்துடன் பருத்தி, மிளகாய் செடியும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான மழையின் காரணமாக மாமரம், முருங்கை மரங்களும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. நெல் உட்பட பாதிக்கப்பட்ட பல்வேறு பயிர்கள் பற்றிய விபரம் சரியாக கணக்கெடுக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செங்கல் சூளைகள் பாதிக்தப்பட்டுள்ளன. பரமக்குடி தாலுகாவில் உள்ள சாயல்குடியில் மட்டும் 25 செங்கல் சூளைகள் கன மழையால் சேதமடைந்தன. இதனால் ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று இரவில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் நேற்று இரவு கனமழை பெய்தது. திருச்சி நகரில் மட்டும் நேற்று 8. 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கரூரில் 6.3, மனப்பாரையில் 5.6,மேட்டூர் 5.2,மாயனூர் 4.9, பொன்னையாறு அணை 4.8, மேல் அணைக்கட்டு 3.6, திருச்சி விமான நிலையம் 2.6,குளித்தலை 2.4 திருமனூர் 1.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!
"அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்யும். புதுச்சேரி, கர்நாடகா கடற்கரை மாவட்டங்கள், தென் கர்நாடகத்தின் உட்புற பகுதிகள், கேரளா மற்றம் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும், தென் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் இரவில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.