தமிழக பட்ஜெட்டில் மதுவிலக்கு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
2007-08-ம் நிதி ஆண்டில் வரி வருவாய் ரூ. 21,599 கோடியிலிருந்து 2008-09-ம் ஆண்டில் ரூ. 20,799 கோடியாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய் 2006-07ல் ரூ.3,673 கோடியிலிருந்து ரூ.5,323 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயத் தீர்வை வருமானம் உயர்கிறது என்றால் மதுபான வகைகளின் விற்பனை உயர்ந்து வருகிறது என்று பொருள். குடி பெருகினால், குடிமக்கள் அழிவர். எனவே, குடியைக் குறைக்க படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. ஆனால், மாநில அரசின் வரி வருவாயில் சம்பளம் ஓய்வூதியத்துக்கான செலவுகள் 76 சதவீதமாக இருக்கும் என பட்ஜெட் கூறுகிறது. இது 2006-07-ம் ஆண்டில் 66 சதவீதமாக இருந்தது.
சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
இலவசத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இலவசங்களுக்காக மக்கள் காலம்காலமாக ஏங்கி நிற்கும் அவல நிலையை போக்க போக்க வேண்டும். மக்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் அரசு வழிவகை செய்ய வேண்டும்.
வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
ஐந்து பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புற்றீசல் போல் தொடங்கப்பட்டுள்ள தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் கட்டணக் கொள்ளை, கட்டாய நன்கொடை ஆகியவற்றைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.