மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி செல்வராஜ் இன்று அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்பட 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இந்த 6 இடங்களையும் நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு கடந்த 8ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன், அ.இ.அ.தி.மு.க. சார்பில் பாலகங்கா ஆகியோரும், சுயேட்சை நான்கு பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நேற்று முன் தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழியாததால் 4 சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இவர்கள் அனைவரும் பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது. எனினும் வேட்புமனுக்களை விலக்கிக்கொள்ள இன்று கடைசி நாள். யாரும் மனுவை விலக்கி கொள்ளாததால் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலருமான செல்வராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.