காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்று சில அரசியல் கட்சிகள் மற்றும் சாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானதாகும்'' காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 06.01.2008 அன்று அரியலூரில் மாநில வன்னிய சங்க தலைவர் ஜெ.குரு, பா.ம.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கை குலைக்க தூண்டும் விதத்திலும் ஆட்சேபகரமாக பேசியுள்ளார். அவர் மீது அரியலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அழிசுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் கணேசன் என்பவர் தனது மனைவி இந்திராவை ஜெ.குரு பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளதாகவும், தனது மனைவியை மீட்டு கொடுக்குமாறும் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் டி.பழூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பா.ம.க மாவட்ட கவுன்சில் உறுப்பினர் செல்வி செல்வம், கட்சி முன் விரோதத்தினால் ஜெ.குரு தூண்டுதலின் பேரில் என் வீட்டில் குண்டு வீசியதாகவும் கொடுத்த புகாரின் பேரில் உடையார் பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கணேசன் வழக்கில் அவரது மனைவி இந்திரா தானாகவே முன் வந்து தன்னை யாரும் கடத்தவில்லை என்று நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு கைவிடப்பட்டது. மற்ற இரு வழக்குகளிலும் புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
எப்போதும் காவல் துறையினர் தன்னிச்சையாக தனி சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்வதில்லை; செய்யவும் இயலாது. இவ்வாறு இருக்க காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்று சில அரசியல் கட்சிகள் மற்றும் சாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானதாகும். காவல் துறையினர் மீது பொது மக்களுக்கு உள்ள நல்ல அபிப்பிராயத்தையும் கெடுக்கும் வகையில் அமையும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.