காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு புதுச்சேரி நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான காஞ்சி சங்கராச்சாரிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம் சாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ண ராஜா விடுமுறையில் சென்றுள்ளதால், இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.அண்ணாமலை முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாற்றப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திர சரஸ்வதி உள்பட 14 பேர் ஆஜராகவில்லை.இதனையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இதனிடையே, இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து ஜெயேந்திரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.