மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி தி.மு.க. முடிவு செய்துள்ளது!
தமிழக சட்டப் பேரவையில் இருந்து 6 பேரை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பாக 5 வேட்பாளர்களும், அ.இ.அ.தி.மு.க. சார்பாக ஒரு வேட்பாளரும் போட்டியிடுவது முடிவாகிவிட்ட நிலையில், இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய ம.தி.மு.க. அரசியல் தலைமைக் குழு, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று கூடியது.
இக்கூட்டத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கித் தந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ம.தி.மு.க. கூறியுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க.விற்கு 60 உறுப்பினர்களும், ம.தி.மு.க.விற்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். இத்தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளரர் குறைந்தது 34 வாக்குகளைப் பெற்றாக வேண்டும். ஆனால், அ.இ.அ.தி.மு.க. - ம.தி.மு.க. சேர்த்து மொத்தம் 66 வாக்குகளே உள்ளதால், 2வது வேட்பாளர் வெற்றிபெற 2 வாக்குகள் குறைவாக உள்ளது.
எனவே, தேர்தலில் போட்டியிட்டு தோற்பதைத் தவிர்க்க, போட்டியிடுவதில்லை என்ற முடிவை ம.தி.மு.க. எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.