வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா திரும்ப பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவின் 1998-99 ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தொடர்பாக மதிப்பீடு செய்த வருமானவரி அதிகாரி ரூ.1.72 கோடி கூடுதல் தொகையாக அறிவித்தார். இதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே வருமானவரி தீர்வு ஆணையத்திடமும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஆணையர் ஜெயலலிதாவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கபாடியா, சுதர்தன் ரெட்டி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வருமானம் குறித்த விவரங்களை வருமான வரித்துறையிடம்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் அதன் பின்னரே சமரசத் தீர்வு மையத்தை நாட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தங்களது மனுவை திரும்பப் பெறுவதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.