தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கிரசுக்கு தலா 2 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்துள்ளதாக 11 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அக்கட்சி சார்பில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களில் ஒரு வேட்பாளராக மீண்டும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தி.மு.க. வேட்பாளர்களாக வழக்கறிஞர் ஜின்னா, வசந்தி ஸ்டான்லியும், மார்க்சிஸ்ட் வேட்பாளராக டி.கே.ரங்கராஜனும் அறிவிக்கப்பட்டு அவர்களில் தி.மு.க.வேட்பாளர்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.