கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை, தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டதை கண்டித்து சி.ஐ.டி.யு சார்பில் சென்னையில் இன்று மறியலில் ஈடுபட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் செயல்பட்டு வந்த கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை வருவாய்த் துறைக்கு மாற்றி மார்ச் 4ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சி.ஐ.டி.யு, அரசின் ஆணையை கண்டித்தும், ஆணையின் நகலை எரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று சி.ஐ.டி.யு. அறிவித்திருந்தது.
அதன்படி சென்னை பாரிமுனையில் உள்ள மெமோரியல் ஹால் அருகே இன்று காலை சி.ஐ.டி.யு தொண்டர்கள் குவித்தனர். பின்னர் சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசின் நகலை எரிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர்.
இந்த நிலையில் 2,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் 150 மையங்களில் மறியல் போராட்டம் நடந்தது.