ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் வைப்பு நிதி திருச்சி துணை மண்டல அலுவலக உதவி ஆணையர் டி.பாண்டியன் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பஜாஜ் இருசக்கர வாகன முகவர் அரசு ஆட்டோஸ். இந்நிறுவனம் தனது திருச்சி கிளையின் தொழிலாளர்களை தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தில் பதிவு செய்யாமலும் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் தொகையை தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தாமலும் இருந்ததாக கூறி தொழிலாளர் வைப்பு நிதி உதவி ஆணையர் டி.பாண்டியன் இந்நிறுவன அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.
இந்நிறுவன கணக்கு மேலாளர் சுரேஷ் குமார் என்பவரை மிரட்டி இதற்காக ரூ.50 லட்சம் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இது தொடர்பான சட்டபூர்வமான நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்க ரூ.4 லட்சம் தனக்கு கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
இது குறித்து சுரேஷ் குமார் மத்திய புலனாய்வு துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து மத்திய புலனாய்வு துறையினரின் அறிவுரைப்படி சுரேஷ் குமார் டி.பாண்டியனிடம் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த மத்திய புலனாய்வு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர், மதுரையில் உள்ள மத்திய புலனாய்வு துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி வரும் 25ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.