Publish Date: Mon, 10 Mar 2008 (16:53 IST)
Updated Date: Mon, 10 Mar 2008 (16:53 IST)
திருவாரூர் அருகே வேனும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த 30 பேர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
வேன் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. வளைவில் வேன் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிமெண்ட் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதில் ஓட்டுனர் செந்தில் குமார் (30) மற்றும் 3 பெண்கள் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 8 வயது சிறுமி, 2 பெண்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். படுகாயம் அடைந்த 23 பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான 7 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த வித்து குறித்து முத்துபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.