முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தின் எதிரொலியாக சிறிலங்கக் கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ளவர்களும் இன்று விடுதலை ஆகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 59 மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சிறிலங்கக் கடற்படையினர் அவர்களைக் கடத்திச் சென்றனர்.
இதனால் அந்த மீனவர்களின் சொந்த கிராமங்களான தூத்தூர், சின்னத்துறை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து கடத்தப்பட்ட 59 மீனவர்களையும் மீட்கக் கோரி முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.
இதன் பலனாக கடத்தப்பட்ட மீனவர்களை சிறிலங்க அரசு நேற்று இரவு விடுவித்தது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதால் அவர்களை கைது செய்ததாக சிறிலங்க கடற்படையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, சிறிலங்க கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 47 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள், ஞாயிற்றுக்கிழமையன்று (இன்று) தாயகம் திரும்புவார்கள்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மற்ற 12 பேரும் இன்று விடுவிக்கப்படுவார்கள். நாளை அவர்கள் தமிழகம் திரும்புவார்கள்.