தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி வால்பாறையில் நாளை அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளும், தோட்ட தொழிலாளர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். வால்பாறை தோட்டங்களில் 50,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுவது வழக்கம். ஆனால் பழைய ஒப்பந்தம் நிறைவு பெற்ற நிலையில் புதிய ஒப்பந்தம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பழைய ஒப்பந்தப்படி வழங்கப்படும் 79 ரூபாய் 85 பைசா கூலியை மட்டுமே இன்னும் தொழிலாளர்கள் பெற்று வருகின்றார்கள்.
புதிய ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட வேண்டும் என்றும், 100 ரூபாய்க்கு மேல் கூலி வழங்கப்பட வேண்டும் என்றும், அண்ணா தொழிற் சங்கத்தினரும் மற்றும் ஏனைய தொழிற்சங்கத்தினரும் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றார்கள். தொழிற் சாலைகளும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு நிர்ணயிப்பத்தில் தொடர்ந்து மெத்தனமாக இருந்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (9ஆம் தேதி) காலை 10 மணி அளவில் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.