Publish Date: Sat, 08 Mar 2008 (11:00 IST)
Updated Date: Sat, 08 Mar 2008 (10:59 IST)
சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ராமநாதபுரம் மீனவர் கிறிஸ்டியின் குடும்பத்துக்கு மேலும் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அந்தோணிசாமியின் மகன் கிறிஸ்டி என்ற மீனவர் கடந்த 5ஆம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டில் பலியான துயரச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, தமிழக முதலமைச்சர் கருணாநிதி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தார்.
மறைந்த கிறிஸ்டியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் கருணாநிதி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு ஏற்கனவே ரூ.1 லட்சம் வழங்கியதன் தொடர்ச்சியாக, அந்த பகுதி மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும், ரூ.4 லட்சம் அந்த குடும்பத்தினருக்கு உதவியாக வழங்கிட வேண்டுமென்று ஆணை பிறப்பித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.