சேலம் அருகே விவசாய கிணற்றில் விழுந்த ஒன்பது காட்டுப்பன்றிகளை பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
சேலம் அடுத்து உள்ளது தலைவாசல். இதன் அருகே உள்ள ஊனத்தூர் கிராமம் சின்னக்கல்ராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியில் உள்ள விவசாய தொட்டிக்கு இந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி நுழையும். இதேபோல் காட்டுப்பன்றி மற்றும் அதன் எட்டு குட்டிப் பன்றிகள் தண்ணீர் தேடி ஊனத்தூர் கிராமம் வந்தன.
பெருமாள் என்பவரது 50 அடி ஆழ விவசாய கிணற்றில் ஒன்பது காட்டுப்பன்றிகளும் தவறி விழுந்துள்ளன. விவசாயி பெருமாள் விளை நிலத்துக்கு தண்ணீர் எடுத்துவிட சென்றபோது காட்டுப்பன்றிகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை கண்டார். இதுகுறித்து ஆத்தூர் வனத்துறை, தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் கிணற்றில் தத்தளித்த ஒன்பது காட்டுப்பன்றிகளையும் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர்.
அனைத்து பன்றிகளும் நல்ல நிலையில் இருந்ததால், அவை அனைத்தும் வனப்பகுதிக்குள் விடப்பட்டன. இந்த சம்பவத்தை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.