தமிழகத்தில் நடக்க இருக்கும் டெல்லி மேல்சபை எம்.பி. தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 டெல்லி மேல்சபை உறுப்பினர்கள் பதவி ஏப்ரல் மாதம் முடிவடைவதால், அந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, மார்ச் 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15ஆம் தேதியாகும். 17ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு 19ஆம் தேதி கடைசி நாள். 26ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் (தேவைப்பட்டால்). அன்று காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மார்ச் 29ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்.
தமிழக சட்டமன்றச் செயலாளரை (எம்.செல்வராஜ்) தேர்தல் நடத்தும் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை துணைச் செயலாளர், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்யலாம் (9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை). வாக்குப்பதிவு தேவைப்பட்டால் 26ஆம் தேதி சட்டமன்ற குழுக்கள் அறையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.