''இந்திய கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவது, மன்னிக்க முடியாத கொடுமை'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறிலங்கா கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொன்று வருகின்ற நடவடிக்கைகள், அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு முழு உரிமை உண்டு. 5ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கிறிஸ்டி சிறிலங்கா கடற்படையால் கொல்லப்பட்டுள்ளார்.
இது மட்டும் அல்ல. அதேநாளில், அதே பகுதியில், மற்றொரு துப்பாக்கி சூட்டையும் சிறிலங்கா கடற்படை நடத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பிரான்சிஸ் நஸ்ரீன் (49) என்ற மீனவர் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். கச்சத்தீவுக்கு மிக அருகில், டெல்ப்ட் தீவு என்ற இடத்தில் அமைந்து உள்ள சிறிலங்கா கடற்படைத் தளத்தில் இருந்து வந்த படகுகளில்தான், சிறிலங்கா கடற்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பதைத் தமிழக மீனவர்கள் உறுதியாக தெரிவித்து இருக்கின்றனர்.
இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்கின்ற கவலை இல்லாத இந்திய கடற்படை ஒரு நொண்டி வாத்தைப்போல இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல், இந்திய கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவது, மன்னிக்க முடியாத கொடுமை ஆகும். இந்திய மீனவர்களை காக்க வேண்டிய கடமையில் இருந்து இந்திய அரசு வேண்டும் என்றே தவறி இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன். அதற்கு ஏற்ப, இந்திய கடற்படையும், சிறிலங்கா கடற்படையுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டுகிறேன்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.