''மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக முடிவு செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்தது கருணாநிதி எடுத்த தன்னிச்சையான முடிவு. இதன் மூலம் பா.ம.க.விற்கு அவர் துரோகம் இழைத்துள்ளார்’’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக கருணாநிதி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பா.ம.க.விற்கு வழங்கப்பட்டதாகவும், 2010ஆம் ஆண்டு தான் அது முடிவடைவதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
அப்படியானால், பா.ம.க.வுக்கு ஒரு எம்.பி.க்கு மேல் இருக்கக் கூடாது என்று கூறுகிறாரா? இதுபற்றி ஜி.கே.மணி, முதலமைச்சரை இரண்டு முறை சந்தித்து பேசியபோது, 2004ல் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக பா.ம.க.வுடன் ஒப்பந்தம் போடப் படவில்லை என்று கருணாநிதி கூறியிருக்கிறார். கருணாநிதி இப்படி கூறியிருப்பது தவறானது. அப்போது பா.ம.க.வுடன் ஒப்பந்தம் போடப் பட்டது.
2004 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் நாடாளுமன்ற தேர்தலுடன் முடிந்து விட்டது. 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து பெற்ற வெற்றியின் காரணமாகத்தான் தற்போது தி.மு.க ஆட்சி பொறுப்பில் உள்ளது. ஆனால் முதலமைச்சர் கருணாநிதி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.
நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஒரு எம்.பி பதவியைத்தான் கேட்கிறோம். ஆனால் தி.மு.க.வுக்கு இரண்டு எம்.பி பதவி என்று கருணாநிதி சொல்கிறார். மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக முடிவு செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்தது கருணாநிதி எடுத்த தன்னிச்சையான முடிவு. இதன் மூலம் பா.ம.க.விற்கு அவர் துரோகம் இழைத்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக எங்கள் கட்சி அடுத்தக்கட்ட முடிவு எடுக்க 15ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு எம்.பி சீட் கொடுத்தால், அந்த கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேட்கிறீர்கள். இப்போது அந்த கேள்வி எழவில்லை. வரும் 15ஆம் தேதி வரை எங்களுக்கு அவகாசம் இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.