''தமிழக மக்களின் உரிமையை காப்பாற்ற முதலமைச்சர் கருணாநிதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய நடவடிக்கையினால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் தற்போதைய தி.மு.க. முதலமைச்சர் கருணாநிதி தான்.
1974ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான், இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசால் இலங்கை நாட்டிற்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை சர்வதேச அளவில் பறிபோய்விட்டது. கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்க கருணாநிதி ஒப்புதல் அளித்ததால், இது போன்ற திருவிழாவில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பு நமது மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது. இது ஒன்றும் கருணாநிதிக்கு புதிதல்ல. நான் முதலமைச்சராக இருந்த போது, கச்சத்தீவை "நிரந்தர குத்தகைக்கு' எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியுள்ளோன். ஆனால், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.
சர்வதேச பிரச்சனை, அண்டை மாநிலங்களுடனான பிரச்சனை, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஆகியவை குறித்து மத்திய அரசிடமும் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்ளும் ஆர்வத்தில் பாதி கூட தமிழக மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவதில் கருணாநிதி காட்டவில்லை.
சுய லாபத்திற்காகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் சிந்தனை செய்வதை விட்டு விட்டு, தமிழக மக்களின் உரிமையை காப்பாற்ற முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.