சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மாணவி, மருத்துவர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் ஜீவராஜ். இவர்களுடைய மகள் ஷாலினி (வயது 15). இவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அப்பல்லோ மருத்துவமனை அருகில் உள்ள ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஷாலினிக்கு தேர்வு மையம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கோல சரஸ்வதி பள்ளி. நேற்று தேர்வு எழுத தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எழும்பூர் கோஆப்டெக்ஸ் அருகில் உள்ள பாந்தியன் ரோடு மேம்பாலத்தில் சென்றபோது இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் ஜீவராஜ், ஷாலினி இருவரும் காயம் அடைந்தனர். ஜீவராஜ் தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். விபத்து நடந்த நேரத்தில் ஷாலினி படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை அந்த வழியாக வந்தார். அவர் ஷாலினியை அருகில் இருந்த தங்கள் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
ஆனால் ஷாலினிக்கு கால் மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கம் தெரிந்த ஷாலினி, தேர்வு எழுத வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
உடனடியாக பள்ளி நிர்வாகம் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு அவருக்கு ஆசான் மெமோரியல் பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதிக்கும் படி கேட்டுக்கொண்டது. அதற்கு அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் மாணவி ஷாலினியை ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தது. கூடவே மருத்துவ குழுவும் பள்ளிக்கு சென்றது.
தேர்வு எழுதிய சிறிது நேரத்தில் ஷாலினியால் எழுத முடியவில்லை. இதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் உதவியுடன் ஷாலினி சொல்லச் சொல்ல தேர்வு எழுதி முடிக்கப்பட்டது.
தேர்வு முடிந்தவுடன் மீண்டும் சிகிச்சைக்காக ஆம்புலன்சு வேனில் ஷாலினி ஏறி மருத்துவமனைக்கு சென்றார். சிகிச்சை பெற்று வரும் ஷாலினிக்கு அடுத்த தேர்வு செவ்வாய்க்கிழமை நடக்க உள்ளது.