''தொகுதி மறுவரையின் அடிப்படையாகக் கொண்டு தயாராகும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்ப்பது, தேவையற்ற பெயர்களை நீக்குவது போன்ற பணிகள் மே மாதத்தில் நடைபெறும்'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மை பற்றி தலைமை தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் ஆராய்ந்து அது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. 18 வயது முதல் 19, 20 முதல் 24, 25 முதல் 29 மற்றும் 30 முதல் 39 வயது வரையில் உள்ளவர்கள் என்று பிரித்துக் கொள்வது; வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது மொத்த மக்கள்தொகையில் அந்த வயதினர் எண்ணிக்கையும், வாக்காளர் பட்டியலில் அவர்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அப்போது இருக்கக்கூடிய மக்கள்தொகையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அதற்கேற்ற வகையில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் வாக்காளர்களை சேர்க்கவோ அல்லது வாக்காளர்களை நீக்கவோ நடவடிக்கை எடுக்கலாம். வாக்காளர் பட்டியல் மற்றும் திருத்தம் ஆகியவற்றை சரிபார்க்க பிராந்திய அளவில் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் 3 முறை சென்று ஆய்வு செய்வார்கள். பின்னர், அது பற்றி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவார்கள். தமிழகத்தை பொருத்தவரை 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்ட சட்டசபை தொகுதிக்கு, பழைய இடத்தில் இருந்து வாக்குச்சாவடிகளை மாற்றும் பணிகள் சரியாக நடந்திருக்கின்றனவா என்பதை பற்றி மே மாதத்தில் ஆய்வு நடத்தப்படும். அப்போது வாக்காளர்கள் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தால் சேர்க்கப்படும். கூடுதலாக உள்ள வாக்காளர் பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நரேஷ் குப்தா கூறினார்.