மத்திய பட்ஜெட்டை மக்கள் விரோத பட்ஜெட் என்று கூறியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு தமிழக முதலைமைச்சர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதியின் கவிதை வருமாறு:
"மக்கள் மன்றம்'' என்பதுதான் "லோக்சபா'' எனும் நாடாளுமன்றம்;
மக்கள் பிரச்சினைகளே விவாதிக்கப்படும் பெரும்பாலும் அங்கு.
கூச்சல் போடுதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு; அது
பாய்ச்சல் நடத்துவதும் உண்டு; பல வேளைகளில்!
அருமை நண்பர் நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள்;
அறுபதாயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து-
அரியதோர் நிதிநிலை அறிக்கையை அகங்குளிர அளித்துள்ளார்.
அதில் சென்னைக்கு முதல்கட்ட ஒதுக்கீடு; முன்னூறு கோடி
கடல் நீரைக் குடிநீராக்க;
முகாரி பாடுவது போல் முன்னாள் முதல்வர் அம்மணியார்;
"மெகா'' அறிக்கை ஒன்று கொடுத்து மக்கள் விரோத
பட்ஜெட் என்கின்றார்.
வியர்வை கொட்டி உழைத்துக் கடன்பட்ட நாலு கோடி விவசாயிகளின்
விடியாப் பொழுதை விடியச் செய்திட அறுபதாயிரம் கோடி
கடன் ரத்து எனிலோ
தடியால் தலையில் அடித்து சில தலைவரை வலியால்
துடிக்கச் செய்கிறதோ
தக்கநேரம் எங்கள் தரித்திரம் அறிந்து புது சரித்திரம் படைத்த தாயே
என்று இந்தியத்
தரணிவாழ் மக்களெல்லாம் போற்றுகின்றார் அன்னை சோனியாவை
தருணமறிந்து தாராளம் காட்டிய தலைமை அமைச்சராம்;
அருமை மன்மோகனை- அன்பர் சிதம்பரத்தை! - ஆனால் இந்த
அம்மணி ஜெயலலிதா மட்டும் பாரிஜாத மலர் வனத்தைப்
பாலைவனத் தரை எனப் பகருகின்றார்
பகலை நள்ளிரவு என்போர்க்கு அந்தப் பைத்தியம் தெளிந்திட
பாரினில் ஒரு வைத்தியந்தான் உண்டோ? சொல்வீர்!