கூட்டுறவு சங்கங்களில் நிதி மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் கோ.சி.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூட்டுறவு சங்கங்களில் திருப்பி வழங்கப்படாத வைப்புத் தொகைகளை திரும்ப வழங்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.
நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை புத்துயிரூட்டவும் சம்பள பாக்கியுள்ள சங்கங்களை முடுக்கிவிட்டு அதிக வருவாய் ஈட்டவும், நலிவடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒவ் வொன்றுக்கும் ரூ.20 லட்சம் சிறப்பு காசுக்கடன் அனுமதிக்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் இதுவரை 792 வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 632 வங்கிகளுக்கு ரூ.126.40 கோடி ரூபாய் காசுக்கடன் அனுமதிக்கப்பட்டு, 416 வங்கிகளில் ரூ.10.12 கோடி அளவிற்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி, கையாடல் குற்றங்களில் ஈடுபடும் அலுவலர்கள் மீது உடனடி குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இழப்புத்தொகையை விரைந்து வசூல் செய்ய வேண்டும். வைத்தியநாதன் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றதால் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1500 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது என அமைச்சர் கோ.சி.மணி திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெற்ற மண்டல அலுவலர்களின் கூட்டத்தில் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.