வங்கி ஊழியர்கள் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
இது குறித்து மத்திய அரசுடன் தலைநகர் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து 25, 26 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
பணிக் காலத்தில் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குதல், ஓய்வூதிய விகிதத்தை அதிகரித்தல், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், வங்கிப் பணிகளை தனியாருக்கு விடக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வேலை நிறுத்த அறிவிப்பை வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்ததையடுத்து, வங்கி ஊழியர்சங்க பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நலத்துறை தலைமை ஆணையர் முகோபாத்யாயா டெல்லியில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார். பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி நடைபெற்ற இந்த நீண்ட நேர பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் நடப்பது உறுதியாகியுள்ளது.