''ராமர் பாலத்தை இடிப்பது கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையாகும்'' என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேது சமுத்திர திட்டத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொண்டுள்ள நிலைபாடுகள் அவர்களுக்கே பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனுவில் கூறியது. இதே வாதம் சேது சமுத்திர திட்டத்திற்கும் பொருந்தும். ராமர் பாலத்தை இடிப்பது, கோடிக்கணக் கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையாகும்.
கடந்த 2006ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டு மன்னரிடமிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 'ஆர்டர் ஆப் லியோபால்ட்' என்ற விருதை பெற்றுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இந்த விருதை பெற்றுள்ள சோனியா, நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க தகுதி இழக்கிறார். அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படவேண்டும். இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும்.
தமிழகத்தில் இந்து கோயில்களின் நிர்வாகத்தை மத தலைவர்கள் அமைப்பிடம் அரசு ஒப்படைக்க கோரி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கு அவர் பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.