விளம்பர தட்டிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அதனை வைத்தவர்கள் அகற்றாவிட்டால் காவல் துறையினரே அவற்றை அகற்றுவார்கள் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும், கிராமப்பகுதிகளிலும் விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காக வைக்கப்படும் விளம்பரத்தட்டிகள், அவைகள் நடைபெறுவதற்கு முதல் மூன்று நாட்களுக்கு முன்பும், நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு 2 நாட்களுக்கும் அனுமதிக்கப்படும் என்று ஏற்கனவே அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகும் ஒரு சிலர் தாங்கள் வைத்திடும் விளம்பரத் தட்டிகளை நிகழ்ச்சிகளுக்கு பல நாட்களுக்கு முன்பே வைத்தும், நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த பிறகு பல நாட்களுக்கு அவைகளை எடுக்காமலும் தொடர்ந்து அந்த விளம்பரங்களை வைத்துள்ளார்கள் என்ற தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே இன்றைய தினம் முதலமைச்சர் இது குறித்து கூட்டிய கூட்டத்தில், இவ்வாறு முறைகேடாக வைக்கப்படும் விளம்பரத் தட்டிகளை அந்தந்த பகுதிகளிலே உள்ள காவல் துறையினரே அகற்றிடும் முயற்சியிலே ஈடுபடுவார்கள் என்றும், அதற்கான செலவினை அவைகளை வைத்திடும் அமைப்புகளிடமிருந்து பெறுவார்கள் என்றும் முடிவெடுத்து அறிவிக்கப்படுகிறது.
எனவே இத்தகைய விளம்பரத் தட்டிகளை வைப்போர் இனிமேலாவது அரசின் இந்த அறிவிப்பையேற்று அவர்களாகவே குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாக அவைகளை இடம் பெறச் செய்வதைத் தவிர்க்க வேண்டு மென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்பை மீறி நடப்பவர்கள் நகரின் அல்லது ஊரின் தூய்மையைப் கெடுக்க நினைப்போர் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அரசு எச்சரிக்கை செய்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.