மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை அங்கேயே தாய் தவிக்க விட்டு சென்று விட்டார்.
மதுரை கொண்டையம்பட்டியை சேர்ந்தவர் விமலா ( 26). இவரது கணவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கர்ப்பமுற்றிருந்த விமலா, பிரசவத்துக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் விமலா சோகத்தில் மூழ்கினார்.
இதையடுத்து, அந்த குழந்தையை பிரசவ வார்டிலேயே விட்டு விட்டு நேற்று வீட்டுக்குச் சென்று விட்டார்.
இது குறித்து மருத்துவமனை சார்பில் காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விமலா வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விமலாவை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு வந்து குழந்தையை எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் கூறினர்.
இதைத் தொடர்ந்து மீண்டும் விமலா மருத்துவமனைக்கு வந்து தனது குழந்தையை எடுத்துச் சென்றார்.