ஈரோடு அருகே அரசு அனுமதி பெறாமல் செயல்பட்ட சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
ஈரோடு அருகே உள்ளது பள்ளிபாளையம். இதன் சுற்றுவட்டார பகுதியில் 150க்கும் மேற்பட்ட சாயபட்டறைகள் உள்ளன. இதில் 80 சாயப்பட்டறைகள் மட்டுமே அரசு முறையாக அனுமதி பெற்று நடத்துகின்றனர். மீதியுள்ள சாயப்பட்டறைகள் அனைத்தும் எந்த ஒரு அனுமதி பெறாமல் இயக்கப்படுகின்றது. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் அருகில் உள்ள நிலங்களில் தேங்குவதால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவு நீர் சாக்கடை வழியாக கலந்து நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிரச்னைக்குரிய சாயப்பட்டறைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராடியும் எந்த பலனும் இல்லை. அரசு மின் இணைப்பு பெற்று புதிதாக சில சாயப்பட்டறைகள் செயல்பட துவங்கியுள்ளன. ஏற்கனவே நிலத்தடி நீர் விஷமாக மாறி வரும் நிலையில் புதிய சாயபட்டறைகளால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு விதிமுறை எதுவும் இல்லாமல் புதிய சாயபட்டறைகள் துவங்கியது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
விவசாயத்துக்கு மின் இணைப்பு பெற்று அதன் மூலம் சாயப்பட்டறை துவங்கியது தெரியவந்துள்ளது. இது போன்று சிறு சாயப்பட்டறைகள் புதிதாக முளைக்க துவங்கியுள்ளதால், சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சாயப்பட்டறைகள் குறித்து மாசுகட்டுபாட்டு வாரியத்துக்கு பொதுமக்கள் பலமுறை புகார் செய்தனர். அதையடுத்து நேற்று புதிய சாயப்பட்டறைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
சுபாஷ் நகரில் உள்ள ஜி.வி., டையிங் பேக்டரியில் ஆய்வு நடத்தியதில், விதிமுறை மீறி சுற்றுப்புற சுழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் சாயப்பட்டறை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மின் இணைப்பு குறித்து விசாரணை நடத்தியதில், தவறான தகவல் கொடுத்து மின் இணைப்பு பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாசுகட்டுபாட்டு வாரிய உத்தரவுபடி மின் வாரியத்தினர் சம்பந்தப்பட்ட சாயப்பட்டறையின் மின் இணைப்பை துண்டித்தனர்.