தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக கிராமப்புறங்களில் அரசுப் பணிகளை செயல்படுத்துவதற்கு உதவியாக இருப்பதற்கென்று ஊராட்சிகள் தோறும் கடந்த 1990ம் ஆண்டு தமிழக அரசால் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
அப்போது, அவர்களுக்கு மாதம் ரூ.200 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. இது 1997ம் ஆண்டில் மாதம் ரூ.800 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் அப்பதவி இரண்டு முறை நீக்கம் செய்யப்பட்டு மூன்றாவது முறையாக 2006ம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது. இன்று அப்பதவியில் இருப்பவர்களுக்கு 40 வயது கடந்துவிட்டதால், அவர்களை நிரந்தரம் செய்து அவர்களது குடும்பத்தை முதலமைச்சர் காப்பாற்றவேண்டும்" என்று கூறியுள்ளார்.