கச்சத்தீவை ஒட்டிய சர்வதேச கடல் எல்லை பகுதியில் சிறிலங்கா அரசு கண்ணி வெடிகளை புதைத்திருக்கிறது என்பது எதிர் நடவடிக்கையில் ஈடுபடாததன் மூலம், இந்திய அரசு சிறிலங்காவுக்கு உடந்தையாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்.
சிறிலங்கா அரசைக் கண்டித்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிப் பேசிய தொல்.திருமாவளவன்,"கச்சத்தீவை ஒட்டிய சர்வதேச கடல் எல்லை பகுதியில் சிறிலங்கா அரசு கண்ணி வெடிகளை புதைத்திருக்கும் விடய்ம் இந்திய அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. இது தெரிந்தும் எதிர்நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டிய இந்திய அரசு, தமிழக மீனவர்களை மீன்பிடிக்க செல்லாதீர்கள் என்கிறது. எனவே, இந்த விடயத்தில், இந்திய அரசு சிறிலங்காவுக்கு உடந்தையாக இருக்கிறது" என்றார்.
"கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் நீண்ட காலத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடியவை என்பதால்,அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்காவை மத்திள அரசு வலியுறுத்த வேண்டும். கண்ணிவெடிகளை புதைத்திருப்பது தமிழக மீனவர்களுக்கு எதிரானது மட்டுமில்லாமல், சேது கால்வாய் திட்டத்தை முறியடிக்கவும் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவும் உள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற இந்தியா சர்வதேச சமுதாயத்தை நாடவேண்டும். இல்லையென்றால் இலங்கை மீது நேரடியாக படையெடுப்பு நடத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும்.
சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க அரசு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, தமிழக மீனவர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது என்ற அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைந்துவிடும்.
இந்திய இறையாண்மைக்கோ, ஒருமைப்பாட்டுக்கோ எதிரான இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்றுதான் 1967-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தார்மீக அடிப்படையில் ஆதரவோ, கருத்தோ தெரிவிப்பது குற்றமாகாது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதாக இருந்தால் தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்" என்றார் திருமாவளவன்.