இந்த ஆண்டு முதல் பள்ளி ஆசிரியர்களைப் போன்று சிறந்த கல்லூரி ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கவும், மேலும், சிறந்த 3 கல்லூரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி ஆணையத்தின் துணைத் தலைவர் அ.ராமசாமி கூறுகையில், பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பது போல் சிறந்த கல்லூரி ஆசிரியர்களுக்கும் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கலை, சமூகவியல், தொழில்நுட்பம் ஆகிய 3 பிரிவுகளில் தலா 2 பேர் வீதம் 6 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த விருது ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு, பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இதேபோல், சிறந்த கலை அறிவியல் கல்லூரி, சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி, சிறந்த பொறியியல் கல்லூரி ஆகியவை தேர்வுசெய்யப்பட்டு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இதற்கு கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி, `நாக்' மற்றும் என்.பி.ஏ. அமைப்புகளின் தரச்சான்று, பாடம் நடத்துவதில் புதுமை, மாணவர் தேர்ச்சி விகிதம், விளையாட்டு செயல்பாடுகள், கல்வி நீங்கலான இதர பணிகள், சமூக சேவை ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சிறந்த கல்லூரிகள் தேர்வு செய்யப்படும்.
சிறந்த கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த கல்லூரிகளை தேர்வுசெய்ய மாநில உயர்கல்வி ஆணையத் துணைத்தலைவர், கல்லூரி கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிறந்த கல்லூரி ஆசிரியர், சிறந்த கல்லூரிக்கான விருதுகளை இந்த கல்வி ஆண்டிலிருந்தே வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன என்று அவர் கூறியுள்ளார்.