அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாற்று அடிப்படையற்ற, விஷமத்தனமான பொய் செய்தி என முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முக்கிய இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோரது தொலைபேசிகள் காவல் துறையின் புலனாய்வுப் பிரிவினரால் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஒரு ஆங்கில பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. யார் யாருடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று ஒரு பெரிய பட்டியலே அதில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் பா.ம.க நிறுவனர் ராமதாசுடைய தொலைபேசியும், நான் உட்பட பா.ம.க உறுப்பினர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்றார்.
இந்த குற்றச்சாற்றை மறுத்து முதல்வர் கருணாநிதி பதிலளிகையில், இது முழுக்க, முழுக்க தவறான செய்தியாகும். சில பத்திரிகைகள் தவறான செய்தியை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அதில் நீங்கள் குறிப்பிட்டு பேசும் பத்திரிகையும் ஒன்றாகும். அந்த பத்திரிகை எப்போது ஆரம்பிக்கப்பட்டது, யாரால் கொண்டு வரப்பட்டது என்பதெல்லாம் தெரியும். எத்தனையோ பொய் செய்தி அதில் போடுகிறார்கள். உங்கள் பத்திரிகையில் கூட கனிமொழி மத்திய அமைச்சர் ஆகிறார் என்று செய்தி வந்தது. அது உண்மையா? அதே போலத்தான் இந்த செய்தியும் என்று முதல்வர் கூறினார்.
முதலமைச்சர் உணர்ச்சி வசப்படுகிறார். இதில் உண்மை இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அந்த செய்தி போடப்பட்டது என்று ஜி.கே.மணி கூறினார்.
நான் உணர்ச்சி வசப்படவில்லை. உணர்ச்சி இருப்பதால் தான் சொல்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
அரசியல்வாதிகள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அவர்களாகவே ஒட்டு கேட்கிறார்களா? என்று ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று. ஆதாரம் இல்லாதது என்று கூறிய முதல்வர், இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த செய்தியை காலையில் பார்த்ததும் உடனடியாக விசாரித்து சொல்லுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன். 29.1.2008 தேதியிட்ட அந்த ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இந்த செய்தி விஷமதனமானதாகும்.
இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக செயல்படும். பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் குறித்து கண்காணிக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் போன் ஒட்டுக் கேட்கப்படுவது என்பது முற்றிலும் தவறான தகவலாகும். இந்த அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வேண்டும் என்றே விஷமத் தனமான செய்திகளை வெளியிட்டு உள்ளனர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.