''தமிழ்நாட்டில் 900 கோயில் தேர்களை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது'' என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணி தொடக்க விழா பெயர் பலகையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்து பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஓடாத நிலையில் உள்ள தேர்களை சீரமைக்க ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்து, 900 கோடியில் தேர்களை சீரமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் திருக்குளங்களையும் தூர் வாரி புதுப்பிக்க, ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள சாலைகள், சுற்றுலாத்துறை மூலம் சீரமைக்கப்படும்.
சமீபத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில், தமிழக கோவில் திருப்பணிக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2007ஆம் ஆண்டு மட்டும், தமிழ்நாட்டில் கோவில் திருப்பணிக்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 960 கோவில்களில் திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.