சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை விரைந்து முடிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் தாயார் தனபாக்கியத்தின் படத் திறப்பு விழா திருச்சியில் நேற்று இரவு நடந்தது. மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சேது சமுத்திர திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்றும், அதே நேரத்தில் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமான திட்டம். இதனை நிறைவேற்ற முடியாமல் பல மதவாத சக்திகள் இடையூறு செய்து வருகின்றன. அவர்களுடைய தவறான நோக்கத்தை முறியடித்து இத்திட்டத்தை சிறப்பான குறித்த காலத்தில் நிறைவேற்றவும் அந்த சக்திகளை முறியடிக்கவும் மக்கள் முன்வர வேண்டும் என்று டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டார்.