ராமர்பாலம் என்று அழைக்கப்படும் ஆதம் பாலத்தை பாரம்பரிய தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க, தமிழக முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சம்மந்தப்பட்ட ஆணையத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராமர் பாலம் இலங்கைக்குச் செல்ல வானரச் சேனை உதவியுடன் ராமனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் சேது சமுத்திரத் திட்ட பணிகளை தற்போது நிறைவேற்றி வரும் பாதையில் இருந்து வேறு வழியாக நிறைவேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் , அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தரூண் சாட்டர்ஜி, ஆர்.வி. இரவீந்திரன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ண குமார் ஆஜராகி வாதாடினார்.
அப்போது, ஒரு குறிப்பிட்ட நினைவுச் சின்னம் தேசிய பாரம்பரியம் உள்ளதா? இல்லையா ? என்று முடிவு செய்வது தங்கள் வேலை இல்லை என்றும், அதற்குரிய ஆணையத்தை மனுதாரரை அணுகச் சொல்லுங்கள் என்றும் நீதிபதிகள் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கிருஷ்ணகுமாரிடம் கூறியுள்ளார்கள்.