''தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவி குழுவினருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டை- சூழல் நிதி வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலைஅரங்கில் நடைபெற்றது. விழாவில் சென்னை மாநகரில் உள்ள 2,000 மகளிர் சுய உதவி குழுவினருக்கு சூழல் நிதி மானியம் தலா ரூ.10 ஆயிரமும், அடையாள அட்டைகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், முதலமைச்சர் கருணாநிதியால் 1989ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு கம்பீரமாக பெருமைப்பட தக்க வகையில் தமிழ்நாடு முழுவதும் இந்த குழு உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 3 லட்சத்து 62 ஆயிரத்து 783 மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளனர். இந்த மகளிர் சுய உதவி குழுவினருடைய எண்ணிக்கை 58 லட்சத்து 39 ஆயிரத்து 338 ஆகும். நகர் புறங்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 508 குழுக்களும், ஊரக பகுதிகளில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 275 குழுக்களும் உள்ளன.
இந்த நிதியாண்டில் மட்டும் 25 ஆயிரம் நகர்ப்புற மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுழல்நிதி மானியமாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கிட மொத்தம் ரூ.25 கோடி வழங்க இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இன்று இந்த நிதி உதவி பெறுகிற பொருட்களுக்கு வங்கிகள் மூலம் தலா ரூ.15 ஆயிரம் கடன் உதவியாக மொத்தம் ரூ.3 கோடி அளவில் வங்கி கடன் வசதி செய்து தரப்படும். இதேபோல் தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். அந்த அறிவிப்பு இன்று இந்த விழாவில் செயல்வடிவம் பெறுகிறது.
சென்னை மாநகரில் உள்ள 5 சுயஉதவிக் குழுக்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு இன்று இந்த விழாவில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.