வடசென்னையில் 600 மெகா வாட் திறன் கொண்ட கூடுதல் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டப் பணியை தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் கருணாநிதியின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய மின் திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்திலேயே அதன் விரிவாக்க திட்டமான 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு கூடுதல் அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதை முன்னிட்டு மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமி தலைமையில், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இத்திட்ட பணிகளை இன்று துவக்கி வைத்தார். இத்திட்டம் துவக்க காலத்திலிருந்து 39 மாத காலத்திற்குள் மின் உற்பத்தியை துவக்கும்.
இத்திட்டத்தினை பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) நிறுவிட உள்ளது. இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் எரிசக்தித துறை முதன்மை செயலர் ரா. சதபதி, தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் சு. மச்சேந்திரநாதன், பாரத மிகுமின் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ.கே. பூரி, இயக்குநர் கே. ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.