''நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்'' தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுகையில், நாட்டில் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டம் அறிமுகமாகும் போதும், வறுமை ஒழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வறுமை ஒழியவில்லை. லஞ்சமும், ஊழலும் ஒழியவில்லை. அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுனர் பணிக்கு இரண்டு லட்சம் லஞ்சம் கேட்கின்றனர். சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமர் லஞ்சத்தை ஒழித்திருக்கிறார். அதற்கு எளிய வழி உள்ளது. தலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி என்பதுதான் அந்த வழியாகும்.
தொடர் மின் தடையால் பள்ளி குழந்தைகள் படிக்க முடியவில்லை. இதுவரை விலைவாசி குறைந்ததா? நெல்லுக்கு ரூ.1000 கொடுத்தார்களா? ஐந்தாண்டு திட்டமிடும் போது நாட்டில் இவ்வளவு மக்கள் தொகை உள்ளது. இவ்வளவு குழந்தை பிறக்கும். அடுத்த பத்தாண்டுக்கு பின் இவ்வளவு மின்சாரம் தேவை என்று ஏன் இந்த அரசு கணக்கிடவில்லை?
தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்த எந்த தேசிய கட்சியாவது காவிரி தண்ணீர் பெற்று கொடுத்ததா? இல்லையே. பிறகு ஏன் ஓட்டு போடுகிறீர்கள்? எனக்கு மட்டும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் மத்திய அரசை ஆட்டி விடுவேன். சிமெண்ட் விலையை ஒரு அரசால் நிர்ணயிக்க முடியவில்லை. சிமெண்ட் ஆலைகளிடம் பணம் வாங்கி விட்டாரா? கூட்டணி கட்சியினர் அவ்வப்போது சத்தம் போட்டார்கள். இப்போது சத்தத்தையே காணோம். பெட்டி போய் விட்டதா?
எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ஜெயலலிதா தன்னை கூறுகிறார். நீங்கள் எம்.ஜி.ஆர் போல் அள்ளிக் கொடுக்கவில்லை. நீங்கள் வாரிசு என்றால் உங்களை பெண் எம்.ஜி.ஆர். என்று மக்கள் கூறியிருக்க வேண்டும். எனக்கும், கருணாநிதிக்கும் குடும்ப சண்டையா? வாய்க்கால் வரப்பு சண்டையா? அ.இ.அ.தி.மு.க. இன்று ஆட்சியில் இருந்தாலும் அக்கட்சியுடன் இதே சண்டையை போடத்தான் செய்வேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விஜயகாந்த் கூறினார்.