தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், கடந்த தேர்தலின் போது அவினாசி-அத்திக்கடவு கூட்டு பாசனத் திட்டம் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. இதை 23 ஆம் தேதி நடக்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் கருணாநிதி அறிவிக்க வேண்டும். உடனடியாக உள்ளாட்சித்துறைக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
கோழிக் காய்ச்சலால் கோழிப் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதலால் விவசாயிகளும், பால் பண்ணையாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.
திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் மற்றும் இன்னும் சில மாவட்டங்களில் சாய மற்றும் தோல் ஆலைகளால் சுற்றுச் சூழல், நீர் நிலைகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால், மக்களுக்கு பல்வேறு நோய்களும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது.
சாயப் பட்டரை, தோல் ஆலைகள் வெளியேற்றும் கழிவு நீரால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று தா.பாண்டியன் கூறினார்.