Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழையா‌ல் ப‌யி‌ர் சேத‌ம்: 2 வாரத்திற்குள் முழுமையாக ‌நிவாரண‌ம் வழங்கப்படும்- த‌மிழக அரசு!

மழையா‌ல் ப‌யி‌ர் சேத‌ம்: 2 வாரத்திற்குள் முழுமையாக ‌நிவாரண‌ம் வழங்கப்படும்- த‌மிழக அரசு!
, திங்கள், 21 ஜனவரி 2008 (11:37 IST)
''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 வாரத்திற்குள் பயிர் சேதத்திற்கான நிவாரணம் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 2007 டிசம்பர் இறுதியில் பெய்த கன மழையின் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் கருணாநிதி பல பகுதிகளை நேரிடையாகச் சென்று பார்வையிட்டதுடன், அமைச்சர்களை அந்தந்த பல்வேறு மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த ஆணையிட்டார். மேலும் மத்திய அரசின் நிதி உதவிக்கு காத்திராமல் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 200 கோடி ரூபாய் 24.12.2007 அன்று ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டார்.

இந்தத் தொகையிலிருந்து வெள்ளப் பெருக்கில் உயிர் இழந்தோர் மற்றும் இறந்து போன கால்நடைகளுக்கான உதவித் தொகை, சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணம், சாலை மற்றும் கட்டமைப்புப் பணிகளைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு ஆகிய இனங்களுக்காக இதுவரை 72 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. உடனடியாக மேற்கொள்ளப்பட்ட வெள்ளச் சேத மதிப்பின்படி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடமிருந்து தற்காலிக நிவாரணப் பணிகளுக்காக 545 கோடியே 12 லட்சம் ரூபாயும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக 965 கோடியே 75 லட்சம் ரூபாயும் ஆகமொத்தம் 1510 கோடியே 87 லட்சம் ரூபாய் நிதிஉதவி கோரி முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு விவரமான அறிக்கையை 27.12.2007 அன்றே அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை சார்ந்த உயர்மட்ட அலுவலர்கள் குழு 10ஆ‌ம் தேதி முதல் 12ஆ‌ம் தேதி வரை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேரிடையாகப் பார்வையிட்டுச் சென்று தங்களது அறிக்கையினை மத்திய அரசுக்கு விரைவில் அளிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரணத்திற்காக நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது. பயிர்களுக்கான இழப்பீட்டைப் பொறுத்தவரையில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட மதிப்பீடு அறிக்கையில் பாசன வசதியுள்ள பகுதிகளில் 1,13,484 ஹெக்டேர் நிலங்களும், மானாவரிப் பகுதிகளில் 16,552 ஹெக்டேர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையின் திருத்திய மதிப்பீட்டின்படி 1,40,617 ஹெக்டேர் பாசன வசதியுள்ள பகுதிகளிலும் 17,546 ஹெக்டேர் மானாவரிப் பகுதிகளிலும் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்‌சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் 1,19,499 ஹெக்டேர் நெற்பயிர்களும், 2,023 ஹெக்டேர் சிறுதானியப் பயிர்களும், 13,115 ஹெக்டேர் பயறு வகைகளும் மற்றும் 23,444 ஹெக்டேர் எண்ணெய்வித்துப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களுக்கான நிவாரண மதிப்பீடு செய்வதற்கென ஊராட்சிமன்றத் தலைவர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று கிராம வாரியாக அமைக்கப்பட்டு பயிர்ச் சேதங்களை முழுமையாக மதிப்பீடு செய்கிறது.

இதுவரை 75 விழுக்காடு பயிர்ச் சேதம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறுவட்ட (பிர்க்கா) அளவில் துணை தாசில்தார் அல்லது ஊராட்சி ஒன்றிய ஆணையர் நிலையிலும், வட்ட அளவில் துணை ஆ‌‌ட்‌‌சி‌ய‌ர் அல்லது உதவி ஊராட்சி இயக்குநர் ஆகியோர் நிலையிலும், மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பயிர்ச்சேத விவரங்கள் இறுதி செய்யப்படுகின்றன. இதன் பின்னர் மாவட்ட மற்றும் தொடக்க அளவிலான கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

கடந்த 2005-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதம் குறித்த விரிவான மதிப்பீடு ஜனவரி 2006 வரை மேற்கொள்ளப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் தான் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது என்பது நினைவு கொள்ளத்தக்கது. பாதிப்படைந்த எந்த ஒரு விளை நிலத்திற்கோ அல்லது விவசாயிக்கோ தக்க நிவாரணம் விடுபடாமல் வழங்கப்பட வேண்டுமென மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்களு‌க்கு தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்த பின்னர் மேற்கொள்ளப்படும் பயிர்ச்சேதம் குறித்த மதிப்பீடு மட்டுமே சரியான சேத விவரத்தினை வெளிப்படுத்தும்.

எனவே, முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பாதிப்பைவிட கூடுதலான நிலங்கள் பாதிக்கப்பட்டதின் விவரம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லா பகுதிகளிலும் சேத மதிப்பீடு முடியும்வரை காத்திராமல் அந்தந்தப் பகுதிகளில் பயிர்ச் சேத மதிப்பீடு செய்யப்பட்ட உடனேயே வெள்ள நிவாரணம் ஆங்காங்கே வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் கால்நடை இழப்பிற்கான நிவாரணம் விரைந்து வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இன்னும் இரு வார காலத்தில் பயிர்ச் சேதத்திற்கான நிவாரணம் முழுமையாக வழங்கப்பட்டுவிடும் எ‌ன்று அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil