ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே நடக்கமுடியமால் முடங்கிய தனது குட்டியை காப்பாற்ற முடியாமல் தவித்த தாய் யானையின் பாசப் போராட்டம் பார்த்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
ஈரோடு மாவட்டம் சதியமங்கலம் அடுத்துள்ளது தாளவாடி கிராமம். இதன் அருகே உள்ள மரியாபுரம் என்ற கிராமம் வனப்பகுதியை ஒட்டியவாறு உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சுமார் ஒரு வயது மதிக்கதக்க ஆண் யானை குட்டி வழி தவறி விவசாய நிலத்தில் வந்தது. குட்டி யானையின் பின்கால்கள் இரண்டும் ஏதோ நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குட்டியானை நடக்கமுடியாமல் மண் நிலத்தில் விழுந்து கிடக்கிறது. இதை காப்பாற்ற தாய் யானை பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தோல்வியடைந்தது. இதைபார்த்த கிராம மக்கள் அந்த யானைக்கு தண்ணீர் கிடைக்க குழாய் மூலம் ஏற்பாடு செய்தனர்.
தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம் மற்றும் தாளவாடி ரேஞ்சர் ராமமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவருடன் சென்று சிகிச்சைக்கு தயாரானார்கள். ஆனால் தாய் யானை குட்டி யானையின் அருகில் யாரையும் செல்ல விடாமல் துரத்துவதால் செய்வதறியாது வனத்துறையினர் திகைத்து வருகின்றனர்.
மேலும் தாய் யானைக்கு மயக்க ஊசிபோட்டு குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். தாய் மகன் பாசப் போராட்டம் கிராம மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.