தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இன்று ஒரே நாளில் 800 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில், லாரியில் கடத்தப்பட்ட 200 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ஜமீன்முத்தூர் பிரிவில் வட்டாச்சியர் முத்துராமலிங்கம் தலைமையில் வாகனச் சோதனை நடந்தது. அந்த வழியாக வந்த லாரியை மறித்த போது, அதன் ஓட்டுநரும் கிளீனரும் இறங்கி ஓடிவிட்டனர்.
இதையடுத்து அந்த லாரியைச் சோதனையிட்டபோது அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 200 மூட்டை ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 10 டன் எடை கொண்ட இந்த அரிசி கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
சேலத்தில் 200 மூட்டை பறிமுதல்!
இதேபோல, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், குணசேகரன் ஆகியோர் மல்லூரை அடுத்த அம்மம்பாளையம் ஏரிக்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லாரியும், அதற்கு பின்னால் ஒரு `மினி' லாரியும் வந்தது. இந்த 2 லாரிகளையும் சோதனை செய்தபோது, அவற்றில் மொத்தம் 200 மூட்டை ரேசன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திய சவுந்தர ராஜன் என்ற ராஜா (வயது 30), லாரி ஓட்டுநர் சேகர் (34), லாரி கிளீனர் குமார்(23), மினி லாரி ஓட்டுநர் ஏசு (25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் 400 மூட்டை பறிமுதல்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ராஜாராம், வட்டாச்சியர் தனசேகரன், தனித் துணை ஆட்சியர் கோவிந்தராஜ், காவல்துறை உதவி ஆய்வாளர் வேல் முருகன் ஆகியோர் இன்று காலை, தும்மக்குண்டு பிரிவு அருகில் ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
அந்த லாரியைச் சோதனையிட்ட போது அதில் 400 மூட்டை ரேசன் அரிசி இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தப்பி ஓடிய கும்பலைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழக ரேசன் அரிசி கேரளத்தில் விற்கப்படுவதாக அம்மாநில அரசு நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.