பலத்த எதிர்ப்பு, அச்சுறுத்தல்களுக்கு இடையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
குஜராத் மாநில முதல்வர் நரேந்தி மோடி நாளை காலை விமானம் மூலம் சென்னை வருகிறார். காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழக பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்புத் தரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவர் தங்கும் விடுதிக்குச் சென்று ஓய்வெடுக்கிறார்.
பின்னர் பகல் 11 மணிக்கு தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்று, தமிழக பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சி நிலவரம் குறித்துப் பேசுகிறார்.
இதையடுத்து மதியம் 1 மணிக்கு போயஸ் தோட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். அப்போது மோடியுடன், பா.ஜ.க. அகில இந்தியப் பார்வையாளர் ரவிசங்கர் பிரஷாத்தும் கலந்து கொள்கிறார்.
இறுதியாக மாலை 6 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்கும் மோடி, இரவிலேயே குஜராத் திரும்புகிறார்.
எதிர்ப்புப் போராட்டங்கள்!
மோடியின் வருகைக்குப் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சத்தியமூர்த்தி பவன் முன்பு இன்று போராட்டம் நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் கைதானார்கள். மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மனித நீதிப் பாசறை அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில முஸ்லிம் அமைப்புகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். சென்னை முழுவதும் கண்டனச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு!
நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய உளவு துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதால், அவர் சென்னை வரும்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் காவலர்கள் கவனமாக உள்ளனர்.
மோடி தங்கும் இடம் கூட ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அடையாறு மற்றும் கிண்டியில் உள்ள 2 நட்சத்திர விடுதிகளில் நரேந்திர மோடி தங்குவதற்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தி.நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம், சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், மோடி தங்குமிடங்கள், செல்லுமிடங்கள், விழா நடைபெறும் இடம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.