குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி தமிழகம் வருவதைக் கண்டித்துச் சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 250க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திட்டத்துடன் பா.ஜ.க. வைச் சேர்ந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். அவருக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா மதிய விருந்து கொடுக்கிறார். இதற்குப் பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மனித நீதி பாசறை அமைப்பினர் இன்று நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவ்வமைப்பின் பொதுச்செயலர் யாமுகைதீன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை நகர தலைவர் அபுபக்கர், செயலர் பக்ருதீன், முஜி புர் ரகுதான், பாகவி உள்பட 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் எம்.எல்.ஏ. கு.செல்வப் பெருந்தகை ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார். மேலும், நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.