”தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியை தொடர்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் காங்கிரஸ் உள்ளது'' என்று மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சிதறி வருகிறது. இடதுசாரிகள் 3வது அணியை அமைப்போம் என்று கூறி வருகின்றனர். மாயாவதியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியை தொடர்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் காங்கிரஸ் உள்ளது.
அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி வரவேற்றுள்ளது. மதசார்பற்ற கூட்டணி என்று இடதுசாரிகள் வழக்கம் போல் கூறிவருகின்றனர். ஆனால், அவர்கள் கேரளாவில் மதானியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இது எப்படி மதசார்பற்ற கூட்டணியாகும்.
வேளாண்மைக்கு தேவையான அத்தியாவசிமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது.
தினமலர் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதற்கு தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது. ஏனென்றால் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கியது தி.மு.க.வினர் தான்.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், ஜனவரி 1ந் தேதி அன்று நடைபெறும் அசிங்கங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.